states

img

மோசடி ஆட்சியும், மூண்டெழும் கேள்விகளும்... - மதுரை சொக்கன்

பிரதமர் மோடி அரசைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்வதாகக் கூறி 100 கேள்விகளை எழுப்பி பாஜக விளம்பரம் கொடுத்துள்ளது. அவர்களுக்கு 50 கேள்விகள் 

  1. 2014 தேர்தலின்போது கருப்புப் பணத்தை கைப்பற்றி ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாகச் சொன்னீர்களே, எப்போது போடுவீர்கள்...?
  2. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றீர்களே, இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறீர்கள்...?
  3. வேளாண் விளை பொருளுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக விலை தருவேன் என்றீர்களே, தந்தீர்களா...?
  4. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டு விட்ட நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது திறப்பீர்கள்...?
  5. வைகை நதிக்கரையில் உள்ள கீழடி அகழ்வாய்வில் ஒன்றுமே கிடைக்கவில்லை என்று கூறி மண் அள்ளி போட்டு விட்டு ஒன்றிய அகழ்வாய்வுத்துறை விலகிக் கொண்டது ஏன்...?
  6. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடாதது ஏன்...?
  7. ஊர் ஊராகச் சென்று ரோடு ஷோ நடத்தும் நீங்கள் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்திற்கு பிறகு ஒருமுறை கூட மணிப்பூர் ரோட்டுக்கு செல்லாதது ஏன்...?
  8. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக உடைத்து மாநில அந்தஸ்தைப் பறித்தது, இஸ்லாமிய மக்களை அதிகமாக கொண்ட ஒரே மாநிலம் ஜம்மு-காஷ்மீர் என்பதால்தானே...?
  9. அரசியல் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்ததால் காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது என்றீர்களே, உண்மையில் அங்கு அமைதி நிலவுகிறதா...?
  10. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி தயாரிக்கும் உரிமத்தை பொதுத்துறை நிறுவனங் களுக்கு மறுத்து இரு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்ததன் மர்மம் என்ன...? அந்த இரு நிறுவனங்களிடமும் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக பணம் பெற்றதற்கும், இதற்கும் தொடர்பு உண்டா...?
  11. கொரோனா தொற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசியை ஒன்றிய அரசு, மாநில அரசு என விலை வைத்து விற்றது ஏன்..? மக்களுக்கு இலவசமாக தர முடியாது  என்று கூறிய நிலையில் உச்சநீதிமன்றம் தலையிடாவிட்டால் கொடுத்திருப்பீர்களா...?
  12. கொரோனாவை தடுக்க வீட்டில் விளக்கேற்றுங்கள், வீதியில் நின்று மணி அடியுங்கள் என்று கூறினீர்களே, இது அறிவியல்பூர்வமானது தானா... ?
  13. இதுவரை இருந்த இந்திய பிரதமர்களிலேயே அதிமாக விமானப் பயணம் செய்த நீங்கள், இந்திய அரசுக்கு சொந்தமான விமான கம்பெனிகளை ஒழித்துக் கட்டியது ஏன்...?
  14. விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், ரயில் நிலையங்களையும் உங்கள் நண்பர்களான அதானிக்கு அள்ளி வழங்கியது ஏன்...?
  15. நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவிற்குக் கூட நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரை அழைக்க மறுத்தது ஏன்...? அவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் அல்லது விதவை என்பதாலா...?
  16. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடந்த நாடாளுமன்ற கூட்டத்திற்குக் கூட குடியரசுத் தலைவரை அழைக்க மறுத்தது ஏன்...?
  17. எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கும் போது நீங்கள் அமர்ந்திருக்க குடியரசுத் தலைவர் நின்று கொண்டிருப்பது நியாயம் தானா...?
  18. தமிழ்நாட்டுக்கு வரும்போது மட்டும் தமிழின் பெருமை பேசும் நீங்கள், ஒன்றிய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்க மறுத்தது ஏன்...?
  19.     சமஸ்கிருதத்திற்கு ரூ.1500/- கோடி ஒதுக்கிய நீங்கள் தமிழுக்கு வெறும் ரூ.74 கோடி மட்டும் ஒதுக்கியது தமிழின் மீது கொண்ட அக்கறையால் தானா...?
  20. தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் மீண்டும் குலக்கல்வி முறையையும், குருகுலக் கல்விமுறை யையும் கொண்டுவரத்துடிப்பது அனைவருக்கும் கல்வி என்ற ஒளியை அணைப்பதற்காகத் தானே... ?
  21. விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலத்தொழில் செய்தால் மட்டும் வங்கிக் கடன் உதவி என்று கூறுவதன் மர்மம் என்ன...?
  22. அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியால் ஏழை எளிய மக்களுக்கு என்ன பயன் என்று விளக்க முடியுமா...?
  23. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது கருப்புப் பணம், கள்ளப் பணம் ஒழிக்கப்படும் என்றீர்களே, ஒழிந்ததா...?
  24. கருப்புப் பணத்தை கொண்டு இதுவரை பாஜக எத்தனை எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்துள்ளது...?
  25. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பிய நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்காததன் மர்மம் என்ன...?
  26. ஜன்தன் வங்கிக் கணக்கு எங்களது சாதனை என்கிறீர்களே, வங்கியில் குறைந்தபட்ச கையிருப்பு இல்லை என்று கூறி ரூ.12000 கோடிக்கு மேல் மக்களிடம் வழிப்பறி செய்தது நியாயம் தானா...?
  27. குற்றவாளிகளை பாஜகவில் சேர்த்துவிட்டால் பரிசுத்தர் களாக மாற்றும் வாஷிங் மெஷின் என்ன விலை...? 
  28. தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை பெற வேண்டும் என்பதை மாற்றியமைத்தது ஏன்...? தேர்தல் ஆணையம் பாஜகவின் தேர்தல் பிரிவா...?
  29. பெட்ரோல், டீசல் விலையை அரசு தீர்மானிப்பதில்லை; சந்தை தான் தீர்மானிக்கிறது என்றீர்களே, தேர்தல் காலத்தில் மட்டும் சந்தைக்கு விடுமுறையா...? சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.480-இல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்திவிட்டு மகளிர் தினத்தையொட்டி ரூ.100 குறைப்பதாகச் சொன்னீர்களே, கடந்த 9 ஆண்டுகளில் மகளிர் தினமே வரவில்லையா...?
  30. தமிழ்நாட்டை எனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறீர்கள், ஆனால் புயல் வெள்ள நிவாரணமாக நயா பைசா கூட கொடுக்க மறுப்பது ஏன்...?
  31. ஊழலை ஒழிக்காமல் விடமாட்டேன் என்கிறீர்கள், ரபேல் விமானம் வாங்குவதில் ரூ.5 லட்சத்து  85 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது ஊழலை  ஒழிப்பதற்கா, ஒளிப்பதற்கா...?
  32. உங்கள் நண்பர் அதானி இந்தோனேசியாவில் இருந்துநிலக்கரி இறக்குமதி செய்ததில் ரூ.42000 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது என்ன...?
  33. அதானி நிறுவனத்தின் முறைகேட்டை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் அமைப்பின் அறிக்கை அடிப்படையில் நடந்த விசாரணை என்ன... அதன் முடிவு என்ன... இதனை விவாதிக்கக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்கியது நியாயம் தானா...? நீங்கள் பிரதமராக ரூ.3000 கோடி செலவு செய்த அதானிக்கு, நீங்கள் செலுத்தும் நன்றிக் கடனா இது...?
  34. தேர்தல் பத்திரம் என்ற  பெயரில் லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கியது உங்கள் அரசு தான். அதுகுறித்த விவரத்தை வெளியிட மாட்டேன் என்று அடம்பிடித்தது எதனால்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கால் உச்சநீதிமன்றம் தலையிட்டு இருக்காவிட்டால் உண்மை வெளியே வந்திருக்குமா...?
  35. உங்கள் ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று சிஏஜி (CAG) அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த லட்சணத்தில் நீங்கள் ஊழலைப் பற்றி பேசலாமா...?
  36. துவாரகா நெடுஞ்சாலை திட்டத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.18.20 கோடி மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.6,788 கோடி கூடுதலாகச் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் தங்கத்தை கரைத்து ஊற்றினீர்களா...?
  37. அயோத்தியில் கோவில் கட்டியது தான் உங்கள் ஆட்சியின் மிக பெரிய சாதனை என்று கூறுகிறீர்களே, அயோத்தி நிலம் வாங்குவதில் கூட ஊழல் நடந்துள்ளதே, இது ஜெய்ஸ்ரீராம் கணக்கு தானா...?
  38. ஏழைத்தாயின் மகன் என்று  கூறிக் கொள்கிறீர்கள், உடை மற்றும் புகைப்படம் எடுப்பது எளிமையின் அடையாளமா...? தைவான் காளான் என்ன விலை,,,?
  39. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்குகிறதா திமுக அரசு என்று உங்கள் விளம்பரம் கேள்வி கேட்கிறது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியே வழங்கப்படுக்கிறதே, அது தெரியுமா உங்களுக்கு...?
  40. மதத்தை வைத்து அரசியல் செய்வதாக இந்தியா கூட்டணியை விமர்சிக்கும் நீங்கள் அயோத்தி கோவிலை கட்டியதாக தம்பட்டம் அடிப்பதன் பொருள் என்ன..?
  41. பொதுத்துறை நிறுவனம் எதாவது உங்கள் ஆட்சியில் புதிதாகத் துவக்கப்பட்டு இருக்கிறதா...?
  42. சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை நிறுத்தியது மத வன்மத்தின் அடிப்படையில் தானே...?
  43. அம்பேத்கரின் புகழை போலியாகப் பேசும் நீங்கள் நாடாளுமன்றத்தில் அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியரின் படத்தை வைத்தது ஏன்...? அண்ணல் உருவாக்கிய அரசியல் சட்டத்தை ஒழித்து விட்டு மநுவின் சட்டத்தை கொண்டு வருவது தானே உங்கள் எதிர்காலத் திட்டம்....?
  44. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்து, ஒழித்துக்கட்ட நினைக்கும் நீங்கள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் ரத்து, வரிச்சலுகை, மானியம் என அள்ளி வழங்குவது ஏன்...? உங்கள் ஆட்சி ஏழைகளுக்கானது அல்ல என்பதால் தானே..?
  45. வேளாண் திருத்தச்சட்டத்தை வேகமாகக் கொண்டு வந்த நீங்கள், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை காலம் போன கடைசியில் அவசரமாக நிறைவேற்றிய நீங்கள், எப்போது நடைமுறைப்படுத்துவீர்கள்?
  46. நாடாளுமன்ற கட்டடத்திற்குள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியவருக்கு பாஸ் கொடுத்தது பாஜக 
  47. எம்.பி.தான். நாடாளுமன்றத்தையே காப்பாற்ற முடியாத நீங்கள் நாட்டை எப்படி காப்பாற்றுவீர்கள்...?
  48. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று இப்போது உருகுகிறீர்களே, புயல் வெள்ளத்தால் தமிழகம் தத்தளித்த போது எங்கே போயிருந்தீர்கள்...?
  49. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று நீங்கள் பேசுவது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டத்தானே... தமிழ்நாடு உங்களுக்கு எதிராக இருக்கிறது என்பதற்காக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளையே வெட்டிச் சுருக்க நினைக்கிறீர்களே இதுவும் தமிழ்நாட்டின் மீது கொண்ட பாசத்தால் தானா...?
  50. படித்திருப்பது ஒரு தகுதியோ, தகுதியின்மையோ அல்ல... ஆனால், உங்கள் படிப்பு குறித்து  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தகவலை வெளியிடுகிறீர்களே,  உண்மையில் நீங்கள் படித்து வாங்கிய பட்டம் தான் என்ன...?
  51. கடைசியாக ஒரு கேள்வி... தேர்தல் முடிவுக்கு பிறகு நீங்கள் பிரதமராக இருக்கப்போவது இல்லை. எதிர்க்கட்சி தலைவராகவாவது உருப்படியாகச்  செயல்படுவீர்களா....?
     
;