states

img

இது பொன் அல்ல, ஐம்பொன்! இது 24 காரட் அல்ல; கருக்கும் கவரிங்!

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கிய பாஜக ஒருவழியாக கடைசியாக தேர்தல் அறிக்கையை ஞாயிறன்று வெளியிட்டுவிட்டது. இதை வெளியிட்டுப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாங்கள் சொல்வதைச் செய்கிறோம் என்று கூறியிருக்கிறார். கடந்த 2014, 2019 தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகள் எல்லாம் வரிசைகட்டி வந்து, எப்போது எங்களை நிறைவேற்றுவீர்கள் என்று  கேட்கவா போகின்றன? ஆனால் 10 ஆண்டுகளாக பொறுத்திருந்த மக்கள் இனியும் பொறுக்க மாட்டார்கள் என்பதை வரும் தேர்தல் முடிவு உணர்த்தும். அது பாஜகவுக்கு சரியான பதிலாக இருக்கும்.  தமிழ்நாடு பல வகையில் பாஜகவுக்கு பாடம் படிப்பிக்கிறது. அதில் ஒன்று தான் ‘நாங்கள்  சொல்வதைச் செய்கிறோம்; என்பது. அதுவும் சொந்த மானது அல்ல. இந்த வாக்கியம் திமுகவிடம் இரவலாகப் பெற்றதாகும். இவர்கள் நிறைவேற்றிய வாக்குறுதிகளாக 370ஆம் சட்டப்பிரிவை நீக்கியதை கூறியிருக்கிறார் ராஜ்நாத் சிங். அத்துடன் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளோம் என்று அளந்து விட்டிருக்கிறார். அது சட்டத்தை நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றினால் போதுமா? அதை எப்போது அமல்படுத்தப் போகிறோம் என்ற காலவரையறை ஏதும் இல்லாத ஏமாற்று வேலை அது என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகத் தெரிந்ததே. வாக்குறுதிகளைக் கொடுப்பதும் அதை வெறும் தேர்தல் ‘ஜூம்லா’ வாக்குறுதி என்று நீதிமன்றத்தி லேயே கூறுவதும் பாஜகவுக்கு கைவந்த கலை. ரூ.15லட்சம், 2 கோடி வேலை, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம்  உள்ளிட்ட முக்கிய கோரிக்கை கள் எல்லாம் இதுவரை கண்டு கொள்ளப்படவே இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ்-சின்  திட்டமான 370  நீக்கம் மட்டும்தானே இவர்களால் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. அத்துடன் மதப் பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை தானே பாஜகவால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் மக்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாததால் பாஜகவையும் மோடியையும் நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட தால், மோடியின் உத்தரவாதத்துக்கு,  இப்போது ராஜ்நாத்சிங் உத்தரவாதம் தருகிறார். அதற்காக மோடியின் உத்தரவாதம் 24 காரட் தங்கம் என்று கூறியிருக்கிறார். இது தங்கமல்ல, ஐம்பொன் கவரிங் என்பது ஏற்கனவே வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் போலி பொன் நகைக்கு உத்தரவாதம் தந்து நம்பச் சொல்கிறார் ராஜ்நாத் சிங். தீ சுடச்சுட  பொன்நகை சுடரும். நாள் படப்பட கவரிங் கருக்கும். கெட்டிக்காரர் புளுகு எட்டுநாள் என்பார்கள். ஆனால் பாஜக புளுகு 10 ஆண்டுகளாகிவிட்டது. இன்னுமா நாடு பாஜகவையும் மோடியையும் நம்பும். எப்படியாவது மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆசை வெறும் நப்பாசையாகத் தான் போகும். ஏனெனில் ஆர்எஸ்எஸ்-சின் மதவெறி எண்ணம் கொண்ட பொதுசிவில் சட்டம், கூட்டாட்சி முறையை ஒழித்துக்கட்டும் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும், ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எல்லாம் மக்கள்  ஆதரவைப் பெறாது. மணிப்பூரில் பழங்குடி மக்களை ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்துவிட்டு, அடுத்த ஆண்டு (2025) பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக் கடைபிடிக்கப்படும் என்று கூறுவது பாஜகவுக்கு எந்தப் பலனையும் அளிக்காது. அதுபோல் தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துக் கொண்டே தமிழ்மொழியை உலக அளவில் பரப்ப புதிய திட்டம்  கொண்டுவருதாகக் கூறுவதை தமிழர்கள் நம்பமாட்டார்கள்.  பாஜகவுக்கு ஏப்.19 -இல் நல்ல பாடம்  கற்பிப்பார்கள்.

;