tamilnadu

தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு,மே 3-ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி விடுமுறை அளிக்காத 124 தொழில் நிறுவனங்கள் மீதுவழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்தொழிலாளர் தினத்தையொட்டி மே 1ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை நாளில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 நாட்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளதா என்பது குறித்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்படி ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 62 கடை நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 41 கடைகள் நிறுவனங்களிலும், 94 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 79 உணவு நிறுவனங்களிலும், 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களிலும் என 166 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 124 நிறுவனங்களில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்கப்படவில்லை.மேலும் அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி அதன் நகலினை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

;