tamilnadu

img

முதலையைப் பிடிக்கப் போய் மீன்களை சாகடித்த கதை

தஞ்சாவூர், ஏப்.7-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா சிலை அருகில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சைநாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத் திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமைவகித்தார் நகரச் செயலாளர் தனம் கோ.நீலகண்டன் வரவேற்றார். சேதுபாவாசத்திரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மு.கி.முத்து மாணிக்கம், தெற்குஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக தலைமைகழக பேச்சாளருமான கம்பம் செல் வேந்திரன் பேசுகையில், “இந்த தேர்தல் மோடியை வீட்டுக்கு அனுப்பக் கூடிய தேர்தல். மோடி ஆட்சிக்கு வந்ததும் ஒரே மொழி இந்தி, ஒரே மதம் இந்து,ஒரே நாடு இந்து ராஷ்டிரம் என செயல்பட்டு வருகிறார். இது ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ள முடியாதது. தேசத்தில்மொழி, மத, இன சிறுபான்மை மக்கள்அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. ஜனநாயகத்தின் தலைக்கு மேல்கத்தி தொங்குகிறது. எனவே மதச்சார்பின்மையை காப்பதற்காக நாம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய மக்கள் விரோத ஆட்சியாக மத்திய பாஜக, மாநில அதிமுக ஆட்சிகள் உள்ளன. 500 ரூபாய், 1000 ரூபாய் செல்லாதுஎன்றனர். காரணம் கேட்டால் தீவிரவாதம், கருப்புப் பணம் ஒழியும் என்றனர். ஆனால் என்ன நடந்தது. முதலையை பிடிக்கப் போய், மீன்களை சாகடித்த கதை தான் நடந்தது. பெரு முதலாளிகள், கார்ப்பரேட் கம்பெனிகள் மீதான மோடியின் அச்சம் தான் இதற்குக் காரணம். கருப்பு பணத்தை அவர்களிடமிருந்து கைப்பற்றினால் அவர்கள் விடுவார்களா? இந்த அச்சத் தினால் தான் மோடி வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார். மோடி மக்களின் காவலன் அல்ல. பெரு முதலாளிகளின் காவலன். ஒரு பொய்யன் இந்தநாட்டின் பிரதமராக உள்ளார். 


ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளால் 3 கோடியே 70 லட்சம்பேர் வேலை இழந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒரு கோடி பேர்வேலை இழந்துள்ளனர். மோடி ஆட்சிஎல்லா வகையிலும் தோற்றது. எட்டாயிரத்து ஏழு பேர் விவசாயிகள் தற்கொலைசெய்து கொண்டதாக புள்ளி விவரங்கள்கூறுகிறது. விவசாயிகளை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்க பிரதமருக்கு நேரம் இல்லை. ஆனால் நடிகைகளை சந்தித்து உரையாடத் தான் நேரம் உள்ளது. விவசாயிகளை கொச்சைப்படுத்தும் ஆட்சிதான் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக உள்ளது. இறைச்சி வைத்திருந்தால் தண்டனை. இறைச்சி தின்றால்தண்டனை. இறைச்சி வைத்திருந்ததாக 32 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்திய மக்களின் காவலாளி என்று சொல்லிக் கொள்ளும் மோடி ஏன்இவர்களை காப்பாற்றாமல் வேடிக்கைபார்த்தார்? 


கன்னக்கோல்கள்


ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் இரட்டைக்குழல் துப்பாக்கி அல்ல. ஒரே பட்டறையில் செய்யப்பட்ட இரண்டு கன்னக்கோல்கள். தானியக் களஞ்சியத்தில் புகுந்த பெருச்சாளி போல் தான் இப்போதைய அதிமுக ஆட்சி உள்ளது. இந்த ஆட்சி மாநிலத்தின் அவமானம். லாயிட்ஸ் ரோடு அதிமுக அலுவலகம் என்பது கமலாலயத்தின் கார் செட் ஆகி விட்டது. இந்த அரசுகள் துடைத்தெறியப்பட வேண்டும். இவ்வாறு கம்பம் செல்வேந்திரன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாலசுந்தரம், சித்திரவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏ.வி.குமாரசாமி, ஆர்.எஸ்.வேலுச்சாமி, மதிமுக நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், குமார், திராவிடர் கழக நிர்வாகி வை.சிதம்பரம், திமுக நிர்வாகி என்.செல்வராஜ், சுப.சேகர், ராஜரெத்தினம் மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;