tamilnadu

img

இந்தி, இந்து, இந்துத்துவாவை விட இந்தியா என்ற நாடு பெரிது!

ஹைதராபாத்:
‘இந்தி, இந்து, இந்துத்துவா’ என்பதை விட இந்தியா என்ற நாடு பெரிது என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுக்கு, மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரே பொது மொழியாக இந்தி பயன்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரின் இந்த கருத்திற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில சிபிஎம் மாநிலச்செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் மட்டுமன்றி, பாஜக மூத்தத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பாஜக-வுக்கு நெருக்கமான சாமியார் ஜக்கி வாசுதேவ், காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஹைதராபாத் எம்.பி.யும், மஜ்லிஸ் கட்சித் தலைவருமான அசாதுதீன் ஓவைசியும், அமித் ஷா-வின், ஒரே மொழி திட்டத்தை கண்டித்துள்ளார். “அனைத்து இந்தியர்களின் தாய்மொழியும் இந்தி அல்ல. ஆகவே, இந்த நாட்டின் பல்வேறு மொழிகளின் அழகையும், தனிச்சிறப்புக்களையும் பாராட்டிக் கொண்டாட வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை. ஒவ்வொருவரும் அவரவரின் மொழி, கலாச்சாரத்தைப் பயன்படுத்துவதற்கு, இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 29-இல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தி, இந்து, இந்துத்துவாவை விட மிகப்பெரியது இந்தியா” என்று ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.

;