tamilnadu

img

இன்று தேசிய மின்சார பாதுகாப்பு நாள் பொதுத்துறை பாதுகாக்க உறுதியேற்போம்....

இந்திய தேசத்தின் கோயில்கள் என்று வர்ணிக்கப்பட்ட பொதுத் துறைகளை ஒவ்வொன்றாக தனியாருக்கு தாரை வார்க்க மோடிஅரசு மோசமான முடிவை எடுத்து வருகிறது.ரயில்வே, வங்கி, பாதுகாப்புத் துறை, எல்ஐசி,மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள், விண்வெளித் துறை உட்பட அனைத்துத் துறைகளையும்  தனியார்  முதலாளிகளை ஈடுபடுத்தி  படிப்படியாக அரசின் பொதுத் துறைகளை முழுமையாக தனியார் கபளீகரம் செய்ய  அனுமதித்து வருகிறது.இந்திய நாட்டிலுள்ள இயற்கை வளங்களான நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை  வார்ப்பது வெகுவேகமாக நடந்து வந்தது. ஜூலை 2 முதல் 4 ஆம் தேதி வரை நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் நடத்திய பிரம்மாண்டமான வேலை நிறுத்தம் அதற்கு ஆதரவாக நாடு முழுவதும்நடைபெற்ற தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தற்பொழுது மத்திய அரசு ஆகஸ்ட் 18 டெண்டர் திறப்பதை ஒத்திவைத்துள்ளது..

இந்திய நாட்டில் அனல் மின்சாரம் மூலம் மின்சார உற்பத்தி 52 சதமானம் உள்ளது. நிலக்கரிசுரங்கங்கள் தனியார்மயம் ஆனால் நிலக்கரி மூலம்உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். இதனால் மின்உற்பத்திக்கான செலவு அதிகரிக்க நேர்ந்தால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்குமாநில அரசுகள் தள்ளப்படும். நுகர்வோர் தலையில் கட்டண உயர்வு சுமத்தப்படும்.இந்திய தேசத்தின் இயற்கை வளங்களான சதுப்புநிலக்காடுகள் சுமார் 1.70 லட்சம் ஹெக்டர் பரப்பளவுள்ள நிலங்களை நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க தனியாருக்கு டெண்டர் விடுவதன் மூலம் அங்கு தொன்றுதொட்டு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் விரட்டியடிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. சொந்த நாட்டிலேயே காலம் காலமாக வசித்து வரும் ஆதிவாசிமக்கள் அகதிகளாக மாறக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயம் ஆக்குவது போல அதனோடு தொடர்புடைய மாநிலமின்சார வாரியங்களையும் தனியார் மயப்படுத்த  மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதனால் நுகர்வோருக்கான மானியங்கள், இலவச மின்சாரம் அனைத்தும் பறிபோகும் நிலை ஏற்படும். மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதுடன்  மின்சாரம் பொதுப் பட்டியலில் இருந்து எடுக்கப்படும். இனி மின்சாரம் வசதிஉள்ளவர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகும். மின்சாரம் சந்தைப் பொருளாக மாறும்.அரசின் பொதுத்துறைகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தேசத்தை பாதுகாக்க, பொதுத்துறையான மின்துறையை பாதுகாக்க நாடு தழுவிய அளவில் தேசிய மின்சார பாதுகாப்பு தினத்தை கடைபிடிக்க உள்ளார்கள்.தமிழக மின்சார வாரியத்தில் செயல்படும் அனைத்து சங்கங்களும் ஆகஸ்ட் 18(இன்று) அனைத்துப் பிரிவு அலுவலகம் முன்பு காலை நேரத்திலும் மதிய உணவு இடைவேளையின்போது செயற்பொறியாளர் அலுவலகம்  மற்றும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.பெற்ற சுதந்திரத்தையும் முன்னோர்கள் உருவாக்கிய பொதுத் துறைகளையும் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கடமையும் உழைப்பாளி மக்களுக்கு உள்ளது என்பதை நிரூபிப் போம்.

===எஸ்.ராஜேந்திரன்===
பொதுச் செயலாளர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)

;