tamilnadu

img

கல்லார்குடி வனமக்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும்: பி.ஆர்.நடராஜன் எம்பி முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி

வால்பாறை கல்லார்குடி வனமக்கள் தங்களது பூர்வீக மண்ணில் குடியமர்த்த தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்லார்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் அவர்களை குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.  

வால்பாறை கல்லார் குடியில் காடர்குடி என்கிற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  சுமார் நூறுக்கும் குறைவான வீடுகள் இந்த செட்டில்மென்டில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையில் மண்சரிவில் வீடுகளை இழந்தனர். இதனையடுத்து எஸ்டேட் வீடுகளில் தாற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர். ஆனால் அதையே இவர்களின் நிரந்தர இடமாக மாற்ற வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருவது இப்பழங்குடி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்களது பூர்வீக இடமான தெப்பக்குளம் மேட்டில் வாழ்விடங்களை ஒதுக்க சொல்லி கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நிலஅளவை செய்யப்பட்டு தற்போதுவரை பழங்குடி மக்கள் வசம் குடியிருப்புக்கான நிலத்தை வனத்துறை வழங்கவில்லை. இந்நிலையில் தங்களது பூர்வீக மண்ணில் இருந்து வனத்துறை விரட்டும் முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதை அறிந்த இம்மக்கள் கடந்த ஆறு நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவ்வனமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பழங்குடி மக்களை வஞ்சிக்கும் வனத்துறையினரை கண்டித்தும், காடர்குடி மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் இப்போராட்டத்தில் தங்களை இணைத்து கொண்டு போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளருமான பி.சண்முகம் நேரிடையாக கல்லார்குடி வந்து போராடும் மக்களுக்கு ஆதரவாக களம் கண்டார்.

போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கல்லார்குடி மக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பங்கேற்றார்.

இதில் போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் தலைவர்களிடம் கல்லார்குடி தெப்பக்குள மேட்டில் குடியமர்த்த உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து உடனடியாக பொள்ளாச்சியில் சர்வட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முன்மொழிவையேற்று கோவை மாவட்ட நிர்வாகத்தால் ஒப்புதல் அளிக்கிறோம் என்கிற உறுதியை அளித்தார். மேலும், போராடும் மக்களை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளப்படும், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். கோவை மாவட்ட ஆட்சியர் நம்பிக்கையான வார்த்தைகளை ஏற்பதாகவும், உடனடியாக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர். முன்னதாக இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், கிழக்கு நகரக்குழு செயலாளர் என்.ஜாகீர், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.எஸ். பரமசிவம், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி,  சிஐடியு வால்பாறை தேயிலை தோட்ட செயலாளர் பி.பரமசிவம் மற்றும் ஏக்தா பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

;