tamilnadu

img

சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு....

சென்னை:
சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது சிறப்புப்பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஜூன் 15 ஆம் தேதி யிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மாணவர்களும், சிறப்பு ஆசிரியர்களும், இத்தேர்வில் கலந்து கொள்ள அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிறப்புப்பள்ளி மாணவர்கள் தேர்வு நடக்க இருக்கும் காலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே விடுதியில் தங்கி பயன்பெறும் சுமார் 800 மாணவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திலிருந்து தாங்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு வருவதற்கு போக்குவரத்துறை மூலம் 49 சிறப்புபேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசு மற்றும்அரசு உதவி பெறும் 72 கல்வி நிறுவன மாணவர்கள் பயன்பெறுவர்.அனைவருக்கும் தங்கள் மாவட்டத்திலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்பும் வகையில் சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரும் உடன் பயணம் செய்யலாம். இப்பேருத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு ஜூன் 8  திங்களன்று காலை 8 மணிக்கு பயணம் தொடங்கி, அன்று மாலையில் வெளிமாவட்டங்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் நிறுவனங்களின் விடுதிகளுக்கு சென்றடைவர். மீண்டும் தேர்வு முடிந்த உடன் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு ஜூன் 26 அன்று காலை 8  மணிக்கு புறப்பட்டு திரும்ப வந்து அடைவதற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பேருந்து பயணம் செய்யும் அனைவரின் நலன் கருதி பேருந்து புறப்படுவதற்கு முன்பு (ஒரு மணி நேரம் முன் கூட்டியே) குறிப்பிட்டஇடத்தில் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;