tamilnadu

img

மத்திய அரசின் நடைமுறையை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமம்.... அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார்

சென்னை:
 மத்திய அரசின் இ - பாஸ் நடைமுறையை பின்பற்றினால் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் படுக்கை வசதிகள் செய்து தரப் பட்டுள்ளது. கோவையில் 6 ஆயிரத்து 312 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள சூழலில் மத்திய அரசின் இ - பாஸ் நடைமுறையை பின்பற்றினால், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.மத்திய அரசு இ-பாஸ் தளர்வு அளித்திருப்பது சுகாதாரதுறையினருக்கு சவாலான விஷயம்.நம்மை பாதுகாத்துக்கொள்ள முதலில் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். ஏனெனில் ‘முகக்கவசம் தான் உயிர்கவசம்’ என்றார். பொதுமக்கள் அனைவரும் குறிப்பாக பயணம் மேற்கொள்ளும்போது முகக்கவசத்தை கட்டாயமாக அணிய வேண்டும். அப்போதுதான் விரைவில் தொற்று பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். அமெரிக்காவில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும்போதும் அதன் முடிவுகள் வெளியாக 7 நாட்கள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் தமிழகத்தில்மட்டும்தான் ஆர்டிபிஷியல் கன்பர்மேஷன் டெஸ்ட் மூலம் கொரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் வெளியிடப்படுகின்றன. அவற்றில் தவறுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அடுத்த 48 மணி நேரத்தில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இந்த பரிசோதனைகள் தற்போது ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 25 சித்தா சென்டர்கள் உருவாக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின்தான் இறப்பு விகிதத்தை 2 பிரிவுகளாக சரிவர கொடுத்து வருகிறோம். ஒன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்கள். மற்றொன்று பிற இணை நோய்கள் மற்றும் கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளவர்கள். இதனால் பொதுமக்கள் யாரும் எண்ணிக்கையை கண்டு அச்சப்படவேண்டாம்.அரசு கொரோனா எண்ணிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;