tamilnadu

திமுகவை டைரக்ட் செய்யும் புத்தகம்...

ஆளுநர் உரையில் அது இல்லை, இது இல்லை என்றெல்லாம் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சொன்னார்கள்!

வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, மீண்டும் உழவர் சந்தை, இந்திய அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்க வேண்டும். சிறு -குறு தொழில் கள் மீட்டெடுப்பு, வட மாவட்டங்களில் தொழில் பெருக்கம்.புதிய துணை நகரங்கள், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்க்கு முன்னுரிமை, 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு.மேகதாது அணைக்கு எதிர்ப்பு, கச்சத்தீவு மீட்பு, நீட் தேர்வு ரத்து, உள்ளாட்சித் தேர்தல், பட்டியலினத்தவர் பணியிடம் நிரப்புதல், சென்னைப் பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.திருக்கோயில்களின் பராமரிப்பைச் செம்மைப்படுத்த - ஆலோசனை வழங்க மாநில அளவில் உயர்மட்ட ஆலோசனைக் குழு, பணிபுரியும் மகளிருக்கு மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள், சச்சார் குழுவின் பரிந்துரைகளை இந்த அரசு திறம்பட செயல்படுத்தும், சேவைகள் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படும், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை, பொருளாதாரத்தை மீட்க வல்லுநர் குழு.இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளஆளுநர் உரை என்பது திமுக அரசாங்கம் போகும் பாதையை டைரக்ட் செய்யும் புத்தகம்.

வெற்றிக்கனிக்கு நன்றி!
என்னை இந்த மாமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கக்கூடிய கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கும் திமுக பெற்ற மகத்தான வெற்றிக்கு தோளோடு தோள் நின்று பணியாற்றிய தோழமைக் கட்சியினர், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது பயணம் தொடரும்!
ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், அதிகாரிகளிடம்  பேசும்போது “எனக்குப் புகழுரை வேண்டாம்; உண்மைகளைச் சொல்லுங் கள்” என்று வலியுறுத்தியிருக்கிறேன். புகழுரைகள், என்னை அதிகளவு அடக்கமானவனாகவும், புகழுரைக்கும்போது அது என்னை மேலும் பக்குவப்படுத்துவதற்கு நான் பயன்படுத்துவேன். எச்சரிக்கை உள்ளவனாகவும் அது ஆக்கியிருக்கிறது.ஏன், என் மீது இதுவரை சொல்லப்பட்ட பழிகள், அவமானங்கள் ஆகியவை என்னை மேலும் மேலும் உழைக்கவும், உண்மையாக இருக்கவும்தான் தூண்டுகிறது. அப்படித்தான் நான் பயன்படுத்தப் போகிறேன். ஏனெனில், புகழுரை - இகழுரை இரண்டையும் எனக்கான உரமாகவே கொண்டு எனது அரசியல் பயணத்தை நான் தொடர்கிறேன்.ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும், அந்தப் பகட்டோடு நான் என்றைக்கும் நடந்துகொண்டது கிடையாது. அந்தத் தலைவருக்கு கடைசித் தொண்டனாகத்தான் நான் நடந்து கொண்டேன்.  இது எனது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியும். அந்தத் தலைவருக்கும் தெரியும்.
மாற்றத்தைப் படைத்த தமிழ்நாட்டு மக்களை மறந்துவிட முடியுமா? ராமலிங்க அடிகள் மனம் உருகிச் சொன்னதைப் போல, “பெற்ற தாய்தனை மக மறந்தாலும், பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும், உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும், உயிரை மேவிய உடல் மறந்தாலும், கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும், கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்” எங்கள் இதயத்தின் இயங்கு சக்தியாக இருக்கும் தமிழ்நாட்டு மக்களை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம்.

(சட்டப்பேரவையில் ஆளுநர் உரைமீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசுகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது)

;