tamilnadu

img

மோடியின் கொள்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேச்சு

தாராபுரம், ஏப் 3 - தாராபுரத்தில் செவ்வாயன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மோடியின் கொள்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாராபுரம் அண்ணாசிலை அருகில் பொதுக்கூட்டம் ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் பேசுகையில், ஈரோடு தொகுதியில் போட்டியிடுகின்ற அ.கணேசமூர்த்தி நேர்மையானவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். எனவே ஈரோடு நாடாளுமன்ற தேர்தலில் அ.கணேசமூர்த்தி அமோக வெற்றிபெறவேண்டும். பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ள அதிமுக கூட்டணியினர் சிந்திக்க வேண்டும். பாஜக என்பது ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட கட்சியல்ல. அது பாசிச கட்சி. ஆர்எஸ்எஸ் எடுக்கிற முடிவைத்தான் பாஜக அமல்படுத்தவேண்டும். மோடியை பொறுத்தவரை அதை முழுமையாக அமல்படுத்தக்கூடியவர். மோடியின் வெளியுறவு கொள்கையோ, உள்நாட்டில் மக்களின் மீது வைத்திருக்கிற பார்வையோ இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்காது. மதச்சார்பற்ற அரசு வேண்டும் என்பதன் அர்த்தம், அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான். அரசியலமைப்புச்சட்டம் அதை தெளிவாக கூறுகிறது. இந்தியாவில் வாழ்கின்றவர்கள் எந்த மதத்தையும் பின்பற்றலாம், எந்த மதத்தையும் பின்பற்றவராதவராக கூட இருக்கலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் சொல்வது இந்துராஷ்டிரம். இந்துக்கள் மட்டும்தான் முதல் பிரஜை மற்றவர்கள் இரண்டாந்தர பிரஜை என கூறுகிறது. இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற இந்த நாட்டில் இருக்கக்கூடாது என்று மிரட்டுகிறது. இந்த நாட்டை ஆண்டு ஆங்கிலேயர்கள், இது கிறிஸ்தவ நாடு என்றோ, முஸ்லீம் நாடு என்றோ கூறவில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் இந்துராஷ்டிரம் என்று கூறி பிரிவினையையும், கலவரத்தையும் ஏற்படுத்துகிறது. மோடி ஆட்சியில் அரசியல் சட்டம் சிதைக்கப்படுகிறது. ரபேல் ஆவணங்களை பாதுகாக்கமுடியாத மோடியா நாட்டை பாதுகாக்கப்போகிறார். பொருளாதார சீரழிவால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. நகரங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படவில்லை. எனவே நடைபெற உள்ள தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியை ஆதரிக்கவேண்டும் இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், திமுக நகர செயலாளர் தனசேகரன், திமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி வழக்கறிஞர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

;