tamilnadu

img

நீட் ஆள்மாறாட்ட வழக்கில்இடைத்தரகர் ரஷீத் நீதிமன்றத்தில் சரண்....

தேனி:
பெரும் புயலை கிளப்பிய  நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் ஓராண்டாக தேடப்பட்ட  முக்கியக் குற்றவாளியான  இடைத்தரகர் ரஷீத் வியாழனன்று  தேனி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கடந்த  2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில்படித்து வரும் முதலாம் ஆண்டு மாணவர் நீட்தேர்வில் முறைகேடு செய்ததாக மருத்துவமனை முதன்மையர் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சல் வந்தது. இதைத் தொடர்ந்து க.விலக்கு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு சிபிசிஐடி.க்கு மாற்றப்பட்டது.விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல்துறையினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ஆறு மாணவர்கள், ஒரு மாணவி, அவர்களின் பெற்றோர், இடைத்தரகர்கள் ஆறுமுகம், மனோகரன், வேதாச்சலம் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர்இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடப்பட்டனர்.இந்த வழக்கில் முக்கிய முதல் குற்றவாளியாக கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்ற இடைத்தரகர் செயல்பட்டது தெரியவந்தது. இருப்பினும் ஓராண்டுக்கும் மேலாக இவரைக் கைது செய்ய முடியாமல் சிபிசிஐடி காவல்துறையினர் திணறி வந்தனர்.இந்த நிலையில் வியாழனன்று  தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ரஷீத் சரண் அடைந்தார். நீதிபதி பன்னீர்செல்வம் அவரை 15 நாள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இடைத்தரகர் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி. காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

;