tamilnadu

img

10ஆம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி

பொதுத் தேர்வை ரத்து செய்து முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜூன் 9- தமிழகத்தில் கொரோனா தொற்று அதி கரித்து வருவதால் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை ரத்து செய்வதாகவும் தேர்வுக்கு பதிவு செய்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஜூன்   15 ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே  அரசு  அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வை தொடங்க அனுமதிக்க  முடியாது என்று கூறியதுடன் நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேர்வை நடத்தும் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று மாநில அரசுக்கு  அறி வுறுத்தினர்.  பின்னர் இதுகுறித்து விரிவாக பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  ஜூன் 11 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தனர். 

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு 

கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பொதுத்தேர்வை இப்போது நடத்தக்கூடாது என்று திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தோழமைக் கட்சிகளும் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் தேர்வை நடத்துவதில் அரசு பிடிவாதமாக இருந்தது. இதை யடுத்து அரசின் முடிவை எதிர்த்து புதனன்று  (ஜூன் 10)  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் அறி வித்திருந்தன. கல்வியாளர்களும் இந்த தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடுத்திருந்தனர்.  அண்டை மாநிலமான தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திங்களன்றும் செவ்வாயன்றும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பின்போது பொதுத்தேர்வு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இதன் பின்னர் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: 

2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் மற்றும்  11 ஆம் வகுப்பில்  தேர்வு  நடத்தாமல் விடுபட்டு போன  வேதியியல்,     கணக்கு பதிவியல், புவியியல் (புதிய பாடத்திட்டம்),  வேதியியல்,     கணக்கு பதிவியல்,    புவியியல் ,  தொழிற்கல்வி-கணக்கு பதிவியல் (பழைய பாடத்திட்டம்) ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.  தேர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்குத்தொடரப்பட்டது. அப்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

சென்னையில் கொரோனா தொற்று அதி கரித்து வருகிறது. வரும் நாட்களில் தொற்று  குறைய வாய்ப்பில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தேர்வு குறித்து அரசு ஆலோசித்தது. அதன்படி, பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 ஆம்  வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. 

தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாண வர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படு கிறது. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு  மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப் பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படை யில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்கப்படும்.   12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில், ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம்  வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப் படும். 12 ஆம் வகுப்பில் ஏற்கெனவே தேர்ச்சிபெறாதவர் களுக்கு நடத்தப்படவிருந்த மறுதேர்வும் ஒத்திவைக்கப்படு கிறது. மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

புதுச்சேரியிலும் ரத்து 

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தக வலை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டார்.  

கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு 

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று (ஜூன் 9)  செய்தி யாளர்களிடம் பேசுகை யில், “தற்போது தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வை ரத்துசெய்வ தாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளின்  வற்புறுத்த லுக்கு பிறகு இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை அரசின் முடிவு பல லட்சம் மாணவர்களின் உயிரை காப்பாற்ற ஏதுவாக அமைந்துள்ளது’’ என்றார்.

மாணவர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு - சிபிஎம் வரவேற்பு

உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தல், போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, நோய்த்தொற்றிலிருந்து மாணவர்கள் பாதுகாக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டபோது நோய் தொற்று அதிகமாக உள்ளது என அனைவரும் வற்புறுத்தியதன் பேரில் அதனை கணக்கில் கொண்டு ஜூன் 15 ஆம் தேதிக்கு அரசு ஒத்தி வைத்தது. ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் கடந்த காலங்களைவிட நோய் தொற்று மிக மோசமாக பரவி வருகிறது. சாவுகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலேயே நோய்த்தொற்று அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆகையால் இந்த தேர்வுகளை இப்போது நடத்த வேண்டாம் என அனைவரும் வலியுறுத்தி னார்கள்.  ஆனால் தமிழக அரசைப்  பொறுத்தவரை இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தேர்வுகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாக செய்து வந்தது.  குறிப்பாக ஜூன் 8 ஆம் தேதி திங்களன்று காலை முதல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கும் பணியை செய்திருந்தனர். 

அதைப்போன்று ஆசிரியர்களை எல்லாம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டு தேர்வு மையங்களை சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  தேர்வுகளை எப்படியேனும் நடத்த வேண்டும் என அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து பேசி, இப்போது உள்ள சூழ்நிலையில், பொதுத்தேர்வு நடந்தால்  மோசமான விளைவுகளை உருவாக்கும்  என்ற அச்சத்தின் காரணமாக,  எதிர்க்கட்சிகள்  அனைத்தும் ஜூன் 10 ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளதாக  அறிவிப்பை வெளியிட்டன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் இது குறித்து பல கேள்விகளை எழுப்பியது. பொதுத்தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர் களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பது, அரசு பொறுப் பேற்றுக் கொள்ளுமா? என கேட்டது.  எதிர்க்கட்சிகளின் இவ்வளவு வற்புறுத்தலுக்கு பிறகுதான்,  இப்போது பொதுத்தேர்வு இல்லை என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது.  பல லட்சம் மாணவர்களை நோய்த்தொற்றிலிருந்து காப்பாற்றும் இம்முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




 

;