tamilnadu

img

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் நிராகரிப்பு... பஞ்சாப் அரசு புதிய வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது....

சண்டிகர்:
மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை நிராகரித்துள்ள முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலம் மிளிர்ந்துள்ளது. தன்னுடைய சட்டமன்றத்தில் இதனை நிராகரித்தும், அதற்குப் பதிலாக மூன்று புதிய சட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று பஞ்சாப் சட்டமன்றத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களையும் முன்மொழிய இருக்கும் மின்சாரத் திருத்தச்சட்ட முன்வடிவையும் நிராகரித்தும், மூன்று சட்டமுன்வடிவுகளைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. அத்துடன்  மாநிலத்தில் குறைந்தபட்ச ஆதார விலையைப் பாதுகாத்திட ஓர் அவசரச் சட்டத்தையும் கொண்டுவந்துள்ளதுடன், மாநிலத்தில் விவசாய விளைபொருள்களைத் தொடர்ந்து அரசாங்கம் வாங்குவதையும் உத்தரவாதம் செய்துள்ளது.  
மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள், குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழே நெல் அல்லது கோதுமை முதலான விவசாயப் பொருள்களை விற்றாலோ, வாங்கினாலோ மூன்றாண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும் வகை செய்திருக்கிறது. மேலும் விவசாய விளைபொருள்களைப் பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது கள்ளச் சந்தையில் விற்றாலோ தண்டனை அளித்திடவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.இதற்காகச் சிறப்பு அமர்வாக கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தொடரில்,  கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமுன்வடிவுகள் அனைத்தும் இரு பாஜக உறுப்பினர்கள் அவைக்கு வராமல் இருந்த நிலையில், மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகள் விரோத சட்டங்கள் என்றும், அவை கிழித்தெறியப்பட வேண்டியவை என்றும் கூறப்பட்டிருக் கின்றது. முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங் இதனை அவையில் தெரிவித்தபின்னர், நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கோரினார்.பின்னர் முதலமைச்சரும், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளுநரைச் சந்தித்து, அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அளித்துள்ளார்கள்.         (ந.நி.)

;