tamilnadu

img

மத்திய அரசு செயல்படுத்திட உள்ள நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை விரைவில் அமலாக்கிடுக.... அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு தீர்மானம்

சென்னை:
மத்திய அரசு சிறு நகரங்களுக் கான வேலைவாய்ப்புத்திட்டத்தை செயல்படுத்திட, மத்திய அரசு ஏற்றுள்ளதை மாநிலக்குழு வரவேற்கிறது. அதே நேரத்தில் தற்போதைய வேலையின்மை மற்றும் விலைவாசியைக் கணக்கில்கொண்டு தினக் கூலியையும்- வேலைநாட்களையும் உயர்த்தி திட்டத்தில் அறிவிக்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்  மாநிலத் தலைவர் ஏ.லாசர் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் இணையவழியாக நடைபெற்றது. அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் முன்னாள் எம்.பி, பொதுச்செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு மத்தியசெயற்குழு முடிவுகள் மற்றும் தேசியநிலைமைகள் குறித்துப் பேசினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

பேரூராட்சி உள்ளிட்ட சிறுநகரங்களிலும் கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களும் - விவசாயம் சார்ந்த உப தொழில்களில் ஈடுபட்டு வரும் நிலைமையில், சமீப ஆண்டுகளாக வேலைவாய்ப்பு குறைந்து வருமானம் இன்றிசிரமப்படுகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, திரிபுரா உள்ளிட்ட சிலமாநிலங்களில் மட்டும் பேரூராட்சி அமைப்பு உள்ளது. இந்தப்பகுதிகளில் அன்றாடம் உழைத்துவாழும் மக்கள் வேலையின்மை யால் வாழ்க்கை நடத்திட அவதிப்பட்டு வருகின்றனர். பேரூராட்சிப் பகுதி மக்களுக்கும் ஊரக வேலைத்திட்டம் துவக்கப்பட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் 6 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டிப் போராடி வருகிறது.

இந்நிலையில் இத்திட்டத்தை சிறுநகரங்களுக்கு நீட்டிக்கவும்- நூறு நாள்கள் வேலை வழங்கிடவும், தினக்கூலி ரூ.202 வழங்கவும்,மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் விரைவில் திட்டத்தை அறிவிக்கப் போவதாகவும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைச் செயலர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.அதே வேளையில் கொரோனாதொற்றுக்கால பொது முடக்கத்தால்கிராமப்புற - நகர்ப்புற வேலையின்மை தீவிரமடைந்துள்ள நிலையில் தினக் கூலியையும் , வேலை நாட்களையும் மேலும் கூடுதலாக்கி அறிவிக்க வேண்டுமெனவும் ஊரக வேலைத்திட்டத்தின் விரிவாக்கம் என இல்லாமல், ‘நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்’ என தனியான திட்டமும் - போதுமான நிதியையும் ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா காலத்தில் வருமானமிழந்துள்ள விவசாயத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்கிட வேண்டும். தமிழக அரசு பொது விநியோகத்தின் மூலம் வழங்கி வந்த விலையில்லாத பொருட்களான பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தொடர்ந்து வழங்கிட வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதியோர் பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முதியோர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பென்சன் மீண்டும் வழங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களின் கல்வியை உறுதிப்படுத்தும் சம வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அக்டோபர் மாதத்தில் பேரூராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துவ தெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் தெரிவித்துள்ளார்.

;