states

பாஜகவின் “மிரட்டும் அரசியல்” பிரச்சாரம்!

கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாஜக வெளியிடும் விளம்பரங்கள் இந்திய அரசியல் அமைப்பையும் சட்டத்தையும் அவமதிக்கிறது. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றியை பாஜகவினால் ஏற்க முடியவில்லை. அதுவும் கடந்த 34 ஆண்டுகளில் இத்தகைய அழுத்தமான வெற்றியை காங்கிரஸ் பெற்றதை அதனால் ஜீரணிக்க முடியவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பெண்கள் தலைமையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2000 ரூபாய் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், 10 கிலோ அரிசி, இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதவர்களுக்கு உத்தரவாதம் ஆகிய தன் ஐந்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட காங்கிரஸ் முடிவு செய்தது. கிளப் மற்றும் விஜயபுரா ஆகிய இரண்டு காவல் நிலையங்களில் விஜயதசமிக்கு காவல்துறையினர் காவி உடை அணிந்தனர். இப்படி இருந்த காவல்துறையை சித்தராமையா அரசு தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சுருக்கமாகச் சொன்னால் நலத்திட்டங்களை வழங்குவதன் மூலம் அனைத்து குடிமக்களையும் சமமாக பாதுகாப்பதன் மூலம் அரசியல் அமைப்பின் மீதான அதன் உறுதிப்பாட்டை காங்கிரஸ் அரசு வெளிப்படுத்தியது.

பாஜக அரசின் மதவெறி அஜெண்டா

முந்தைய இரட்டை எஞ்சின் அரசு( 2019- 23), கர்நாடகா கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் படுகொலை தடுப்புச் சட்டம் 2021 ஐ அதிவேகமாக அறிமுகப்படுத்தியது. மேலும் அது கொண்டு வந்த மத கட்டமைப்புகள் பாதுகாப்பு சட்டம் 2021 மற்றும் மத சுதந்திரத்திற்கான கர்நாடக பாதுகாப்பு சட்டம் 2022 அனைத்து சிறுபான்மையினரிடம்  கடும் அச்சத்தை ஏற்படுத்தியவையாகும். கால்நடை வர்த்தகத்தின் எந்த பகுதிகளை அனுமதிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இடைத்தரகர்களை அவர்கள் வளர்த்து விட்டனர். ஷிமோகாவை சேர்ந்த ஹர்ஷா போன்ற சந்தேகத்திற்குரிய குற்றப் பின்னணியை கொண்டிருந்தவர்களை பாஜக ஆட்சி தியாகி எனக்கூறி கௌரவித்தது . மக்கள் நல அரசியல் இந்தப் பின்னணியில் தான் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் வேலை, வறுமை மற்றும் விலைவாசி உயர்வு, பேச்சு சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, வறட்சியை  எதிர்கொள்ளுதல் போன்ற முக்கியமான அம்சங்களில் நாட்டு மக்களின் கவனத்தை காங்கிரஸ் திருப்பியது.

கலவரத்தீயை மூட்டிய பாஜக

மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை உருவாக்க முனைந்துள்ளது. அரசு வளாகங்களில் காவிக் கொடி ஏற்றும் முயற்சி நடந்தது. ஆனால் அது முறியடிக்கப்பட்டது. ஒரு கடைக்காரருக்கும் உள்ளூர் முரட்டுக் கும்பலுக்கும்(இந்து மற்றும் முஸ்லிம்) இடையே நடந்த சண்டை சச்சரவு அனுமான் சாலிசாவுக்கு எதிராக மாற்றப்பட்டது. அதுவும் எடுபடவில்லை.  ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் நேகா ஹிராமத்தை அவரது முன்னாள் வகுப்பு தோழரான ஃபயாஸ் துரதிஷ்டவசமாக கொன்றது ஆகியவை கலவரங்களை தூண்டி விட பாஜகவின் கைகளில் நல்ல வாய்ப்பாக வந்து விழுந்தது. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டம் மக்களின் கவனத்தை ஆக்கிரமித்ததால் அதன் கலவர எண்ணங்கள் ஈடேறவில்லை.பாஜகவும் ஏமாற்றம் அடைந்தது. இப்போது மாநிலத்தில் அது வெளியிடும் விளம்பரம் மக்களை‌ எச்சரிக்கை என்ற பெயரில் மிரட்டுவதாக உள்ளது. கண்ணியத்தை இழக்கச் செய்கிறது. நிறைவேற்றப்படாத ஒன்றிய அரசின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார விளம்பரங்களுக்கு நேர் எதிராக பாஜகவின் விளம்பரங்கள் தரமிழந்து காணப்படுகின்றன. சித்தராமையாவை போன்ற ஒரு மனிதர் நடந்து செல்லும் பொழுது ரத்தம் தோய்ந்த காலடித்தடங்களை விட்டுச் செல்வதாகச் சித்தரிக்கிறது.

வெறுப்பை உமிழும் விஷப் பிரச்சாரம்

கல்லூரிக்குச் செல்லும் பெண்ணை லவ் ஜிகாத்துக்காக பலியிட வேண்டுமா? தேநீர் அருந்துபவர்கள் ஒரு ஹோட்டலில் வெடிகுண்டுக்கு பயப்பட வேண்டுமா? “விதான் சவுதா” சட்டப்பேரவைக்கு வருபவர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்னும் கோஷத்தை கேட்க வேண்டுமா? மேயும் மாடு வெட்டும் கத்தியை கண்டு பயப்பட வேண்டுமா? இப்படி ஒன்பது குற்றச்சாட்டுகள் கொண்ட பட்டியலில் 6  முஸ்லிம்களுக்கு எதிரானது. 3 பட்டியல் சாதி, பழங்குடியினரின் நல ஒதுக்கீடு பற்றியும் காவிரி நதிநீர் பங்கீடு பற்றிய எச்சரிக்கைகளையும் கொண்டவை. இத்தகைய விளம்பரங்கள் அனைத்தையும் முக்கிய கன்னட மொழி செய்தித்தாள்களிலும் பாஜக வெளியிடுகிறது. கன்னடம் பேசும் பொதுமக்கள் மட்டுமே எச்சரிக்கப்படுமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு வாக்களிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த பாஜகவின் விளம்பரம் அதற்கு எதிராகவே மாறும். இஸ்லாமியர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கும் அதன் சொல்லாடல்கள் இனிமேலும் பலனளிக்க போவதில்லை. என்கவுண்டர் மற்றும் புல்டோசர் நீதி மூலம் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுபவராக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ளும் அதன் செயலை மக்கள் நம்பவில்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தை பாஜக அவமதிக்கிறது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

கர்நாடகாவிற்கு அநீதி!

கர்நாடகாவிற்கு சேர வேண்டிய நியாயமான வரி வருமானத்தை பிரித்துக் கொடுக்க மோடி அரசு மறுத்து வருகிறது. ஆகையால் மாநிலத்தின் வரிக்குடம் காலியாக உள்ளது என காங்கிரஸ் மிகவும் ஆக்ரோஷமாக ஒன்றிய அரசை மாநில மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துகிறது . ஆனால் பாஜகவோ  அந்த குடம் இந்துக்களின் ரத்தத்தால் நிரப்பப்பட்டுள்ளது என கொடூரமாகப் பேசி வருகிறது. முஸ்லிம்களின் மீது  விஷத்தைக் கக்கும் பிரதமர் மோடி மீது யாராலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற தைரியத்தில் தான் பாஜக இப்படி வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களை  பழிவாங்கிடவே இத்தகைய கலவரத் தீயை அது மூட்டி வருகிறது. இதன்மூலம் கர்நாடகா, இந்தியா என்ற ஒற்றுமை நிறைந்த அனைத்து கருத்தாக்கத்தையும் பாஜக குழி தோண்டி புதைக்கிறது.

- ஜானகி நாயர்
நன்றி : தி இந்து 25/4/24.
தமிழில்: கடலூர் சுகுமாரன்




 

;