districts

img

சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றார் ஆர்.பிரியா

சென்னை, மார்ச் 4 - சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக ஆர்.பிரியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றான பெருநகர சென்னை மாநகர மேயர், துணை மேயருக்கான தேர்தல் வெள்ளியன்று (மார்ச் 4) நடைபெற்றது. இதற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை அதிமுக கூட்டத்தை புறக்கணித்தது. மாமன்ற கூட்டம் தொடங்கியதும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி மேயர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். திமுகவை சேர்ந்த 74ஆவது வார்டு உறுப்பினர் ஆர். பிரியா வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து, ஆர்.பிரியா போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, மேயருக்கான உடை, மாநகராட்சி சின்னம் பொறித்த பதக்கம் அடங்கிய தங்க சங்கிலிகளை வழங்கினார். மேயருக்குரிய ஆடை, அணிகலன்களை அணிந்த ஆர்.பிரியாவை, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் அழைத்து சென்று மேயர் இருக்கையில் அமர வைத்து, செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், த.வேலு, தாயகம் கவி (எ) சிவக்குமார் உள்ளிட்டோரும் மேயருக்கு ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இதன் மூலம் 334 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சென்னை மாநகராட்சியின் 3வது பெண் மேயர், பட்டியலினத்தை சேர்ந்த முதல் பெண் மேயர் என்ற சிறப்பை ஆர். பிரியா பெற்றுள்ளார். மேயராக பிரியா பதவியேற்றதை தொடர்ந்து, மாநகராட்சி சின்னம் பொறித்த நீலவண்ண (ஸ்கைபுளு) கொடி ரிப்பன் மாளிகையில் ஏற்றப்பட்டது.

இருக்கையும், தங்க சங்கிலியும்
புகழ்பெற்ற சென்னை மாநகராட்சியின் மேயர் இருக்கை பழம் பெருமை வாய்ந்தது. சென்னையின் மேயராக ராஜா முத்தையா செட்டியார் 1933ஆம் ஆண்டு பதவி ஏற்றார். தனது சொந்த செலவில் அவர் ஒரே தேக்கு மரத்திலாக அழகிய வேலைப்பாடுடன் கூடிய நாற்காலியை செய்து கொண்டு வந்து கூட்ட அரங்கில் வைத்து அமர்ந்தார்.  மேலும் 105 சவரன் தங்க சங்கிலிகள் மற்றும் வெள்ளியிலான செங்கோல் முதலியவற்றை சென்னை மாநகராட்சிக்கு வழங்கினார். சென்னை மாநகராட்சிக்கு பதவி ஏற்கும் மேயர்கள் அனைவரும்  பாரம்பரியமாக தங்க சங்கிலி அணிந்து, செங்கோல் ஏந்தி மாமன்றத்தை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர், பிரதமர் போன்றோர் பங்கேற்கும் பெரிய நிகழ்வில் மட்டுமே மேயர் மொத்த தங்க சங்கிலியையும் அணிவார். மாமன்ற கூட்டத் தொடரின் போது மாநகராட்சி சின்னம் பொறித்த டாலர் உடனான சிறிய தங்க சங்கிலி அணிந்திருப்பார். இந்த தங்க சங்கிலிகள் இந்தியன் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படும். அதன் சாவி மாநகராட்சி ஆணையராக பதவி வகிக்கும் நபரிடம் ஒன்றும், வங்கி மேலாளரிடம் ஒன்றும் என இரண்டு சாவிகள் இருக்கும்.

துணைமேயர்
இதனை தொடர்ந்து பிற்பகலில் நடைபெற்ற துணை மேயருக்கான தேர்தலில் திமுக சார்பில் 169வது வட்ட மாமன்ற உறுப்பினர் மு.மகேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேறு எவரும் மனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வானதாக ஆணையர் அறிவித்து, பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

;