tamilnadu

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குக சிஐடியு கோரிக்கை

 திருப்பூர், ஏப். 16 –திருப்பூரில் சாயக்கழிவை சுத்தம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலையில் உயிரிழந்த நான்கு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு சட்டப்படி தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம் திங்களன்று திருப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூரில் ஜெயக்குமார் என்பவர் நடத்தி வந்த யுனிட்டி வாஷிங் என்ற சாயஆலையில் சாயகழிவுநீரை அடைத்து வைத்திருந்த தொட்டியை சுத்தம் செய்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுத்தம் செய்யாமல் மனித உழைப்பால் கழிவுகளை அகற்றியதால் ஏற்பட்டுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மலம் மற்றும் கழிவுகளை இயந்திரம் கொண்டுதான் அகற்றப்பட வேண்டும் என்ற சட்டத்திற்கு இது மாறான நடவடிக்கையாகும். எனவே 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மலம் மற்றும் கழிவுகளை அகற்றும் சட்டப்பிரிவு 7 மற்றும் உரிய பிரிவின் கீழ் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவியும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிஐடியு திருப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

;