tamilnadu

img

ஜூலியன்அசாஞ்ச் கைதுக்கு பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் கண்டனம்

ஜூலியன்அசாஞ்ச் கைது செய்யப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரக வளாகத்தில் கடந்த வியாழனன்று கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்ச் மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்வீடன் அதிகாரிகளுடன் வழக்கு விசாரணைக்குத் தயார் என்றும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பான உத்தரவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடுவேன் என்றும் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அசாஞ்ச் கைதுக்கு பத்திரிகையாளர் என்.ராம், எழுத்தாளர் அருந்ததி ராய், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங், எழுத்தாளரும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, பத்திரிகையாளர்கள் பி.சாய்நாத், ரோமிலா தாப்பர் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கைதுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைக் கைது செய்து, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடிவு செய்திருப்பது பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்துகளை வெளியிடும் உரிமை மீதான தாக்குதலாகும்.

உலகில் நடந்த பல்வேறு சம்பவங்களில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் அசாஞ்ச். அவரும் விக்கிலீக்ஸும் இல்லாமல் போயிருந்தால் பல்வேறு உண்மைகள் வெளிவராமல் போயிருக்கலாம். விக்கிலீக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் குழு தலைவராக இருந்தபோதும், அவர் ஒரு புதிய வகையிலான பத்திரிகையாளராக பணியாற்றி பல உண்மைகளை வெளிகொண்டு வந்தார்.

உலகம் முழுவதும் நடைபெறும் அநீதி, அட்டூழியங்களுக்கு எதிராக போராடும் ஊடகமாக விக்கிலீக்ஸ் உள்ளது. அதே நேரத்தில் வெளியிடும் செய்தியில் உண்மைத்தன்மை, ஆதாரத்தை நிலைநாட்டியது விக்கிலீக்ஸ்.

ஆதாரங்களை பாதுகாத்தல், கருத்துகளை வெளியிட சுதந்திரம் இவை இல்லாவிட்டால் பத்திரிகையாளர்கள் உண்மையை பேச முடியாது. கைது செய்யப்பட்ட அசாஞ்சை உடனடியாக விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறோம். இதன்மூலம் பத்திரிகை சுதந்திரத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



;