articles

img

இந்தியா கூட்டணியின் உந்து சக்தி இடதுசாரிகளின் வலுவான வெற்றி - ஜி.ராமகிருஷ்ணன்

விடுதலைப் போராட்டக் களத்தில் உருவான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய, அந்நியர் ஆட்சியை அகற்ற வேண்டு மென்ற இலக்கை முன்வைத்ததோடு பூரண சுதந்திரம் என்ற கோரிக்கை முழக்கத்தையும் எழுப்பியது. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு, நில உடைமை ஆதிக்கத் திற்கு முடிவு கட்டுவது, சாதி ஒடுக்குமுறையை ஒழிப்பது போன்ற அரசியல், சமூக, பொருளாதார மாற்றத்திற்கான, பூரண சுதந்திரத்திற்கான திட்டத்தை  1921ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டுகள் முதன் முதலாக முன்மொழிந்தனர். காங்கிரஸ் கட்சி, அந்நியர் ஆட்சி அகற்றப்பட வேண்டுமென்ற முழக்கத்தையே பிரதானமாக முன்வைத்தது. 1925ம் ஆண்டு உருவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு  இந்துத்துவா - இந்து ராஷ்டிரா என்ற திட்டத்தை முன்வைத்து செயல்படத் துவங்கியது.

மகாகவிகளின் முழக்கம்

சுதந்திரப்போராட்டக் காலத்தில்
“எங்கே மனம் அச்சமில்லாமல் இருக்கிறதோ;
தலை நிமிர்ந்து நிற்கிறதோ
அங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறது”

என பேச்சுச் சுதந்திரத்திற்கான, கருத்துச் சுதந்திரத் திற்கான போர்க்குரலை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுப்பினார்.

“முப்பது கோடி முகமுடையாள் - உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்”

என  மொழியால், இனத்தால், பண்பாட்டால் வேறுபட்டிருந்தாலும் நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்க  வேண்டுமென மகாகவி பாரதி பாடினார். வேற்றுமை யில் ஒற்றுமை என்ற கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு அடிகோலியது இவரது பாடல். சமூக சீர்திருத்தத்திற்காக ஜோதிபா பூலே, நாராயண குரு, தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற  சமூகப் போராளிகள் எழுப்பிய முழக்கங்களும் நடத்திய போராட்டங்களும் சாதி, மத பேதமற்ற, மதச்சார்பின்மைக்கான கருத்தியல் அடித்தளத்தை உருவாக்கின. தெலுங்கானாவில், வங்கத்தின் தெபாகாவில், கேரளத்தின் புன்னப்புரா - வயலாரில், தமிழகத்தின் கீழத்தஞ்சையில், மராட்டியத்தின் வொர்லியில்  - என நாட்டின் பல பகுதிகளிலும் நிலத்திற்காக; பண்ணை யடிமைத் தனம் மற்றும் தீண்டாமை ஒழிப்பிற்காக; பழங்குடியின மக்களின் விடுதலைக் காக எழுந்த இயக்கங்கள் கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய  வீரகாவியங்களாகும். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கவும், தமிழ்நாடு எனப் பெயரிடவும் நடத்திய போராட்டங்கள் உட்பட கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு அளப்பரியது. நாடு அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவான பின்னணியில் நாட்டின் பல பகுதிகளில் மத மோதல் ஏற்பட்டது. மத நல்லிணக்கத்திற்காக, மதச்சார்பின்மைக்காக பாடுபட்ட அண்ணல் காந்தியை கோட்சே கும்பல் சுட்டுக்கொன்றது. காந்தி யை கொன்ற ஆர்எஸ்எஸ்சின் மதவெறிக் கருத்தியல் தான் இப்போது பாஜகவுக்கு வழிகாட்டி வருகிறது.

இந்தியா ஒரு நாடல்ல;  துணைக் கண்டம்

இத்தகைய இடிபாடுகளின் பின்னணியில்தான் இந்திய அரசியல் சட்டம் உருவானது. மனுநீதியின் அடிப்படையில் அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தை அரசியல் நிர்ணய சபை நிராகரித்தது. ஜனநாயகம், மதச்சார் பின்மை, கூட்டாட்சி, பொருளாதார இறையாண்மை, சமூக நீதி ஆகிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியல் சட்டம் உருவானது. “இந்தியா ஒரு நாடல்ல. அது ஒரு துணை கண்டம்.  நினைத்து பாருங்கள். எத்தனையோ இனக்குழுக்கள், மதங்கள், கலாச்சாரங்கள், நூற்றுக்கணக்கான மொழி கள். மனித இனத்தில் ஆறில் ஒரு பகுதி ஒரே இடத்தில் வசிக்கும் இதை ஒரு கண்டம் என்றே கூறலாம்”  என  ஒரு எழுத்தாளர் வர்ணித்தார். இதைத்தான் சின்னாபின்னமாக்கிட பாஜக முயற்சிக்கிறது. 2014ம் ஆண்டு மத்தியில் அதிகாரத்திற்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 10 ஆண்டு களில் அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தூண்களான மேற்கண்ட விழுமியங்களை தகர்த்து வருகிறது.

‘இந்துத்துவா’ ராஜ்ஜியம்

ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் நடத்தப்பட்ட கோயில் திறப்புவிழா மதச்சார்பின்மைக்கு சாவுமணி அடித்துவிட்டது. இது, மதச்சார்பற்ற ஜனநாயக அரசியலமைப்புச் சட்ட அடிப்படையிலான இந்திய குடியரசு இப்போது ‘இந்துத்துவா ராஷ்டிரம்” என்று அறிவிக்கப்பட்ட நிகழ்வே ஆகும். இந்திய தேசியம் ‘இந்துத்துவா தேசியமாக’ மாற்றப்படுகிறது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் - உபா, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை  சிபிஐ, மத்திய புலனாய்வு முகமை போன்ற சட்டங்களை பயன்படுத்தி சட்டப்படியாகவே ‘எதேச்சதிகார - கார்ப்பரேட்மய-இந்துராஷ்டிரா’ அரசாக  மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

எத்தனை எத்தனை படுகொலைகள்

மோடியை, பாஜக அரசை விமர்சிப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். ஊடகங்களின் குரல்வளை  நெரிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டில் மட்டும் 123 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடக சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஊடக சுதந்திர குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 161வது இடத்தில் உள்ளது. 80 தகவல் உரிமை செயல்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஊழலுக்கு சட்ட அங்கீகாரம்

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை உருவாக்கிட ஐந்து  சட்டங்களை மோடி அரசு திருத்தியது. யார் நிதி கொடுக்கிறார்கள், யாருக்கு கொடுக்கிறார்கள், எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பதை மூடு மந்திர மாக வைத்து, உலகமகா ஊழலை அரங்கேற்றி யுள்ளது மோடி அரசு. தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது, ஊழலுக்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மிகவும் அம்பலப்பட்டு, ஊழல் முடைநாற்றமெடுத்த கட்சி பாஜக என்று நாடே காரித்துப்பியுள்ள நிலையில், “தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் விரைவில் வருத்தப்படுவார்கள்” என மோடி இப்போது  ருத்ர தாண்டவமாடுகிறார். ஊழலை அப்பட்டமாக நியாயப்படுத்துகிறார். ஊழல் செய்வது தமது ஜீவாதார உரிமை என மோடி கருதுகிறார் போலும். அவர் தலைமையிலான பிஎம் கேர்ஸ் நிதியும் இந்த வகையைச் சார்ந்தது தான்.  ஊழலை அம்பலப்படுத்திட ஒருவர் புகார் கொடுத்தால் ‘ரகசிய காப்புச்’ சட்டத்தின் கீழ் (official secrets Act) அவர் பற்றிய விபரங்களைக் வெளி யிடக் கூடாது. அவ்வாறு ரகசியங்களை வெளியிட்டால் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்க அச்சட்டம் வழி  செய்கிறது. இப்பிரிவை மோடி அரசு நீக்கி விட்டது.  இதன் விளைவாக, ஊழல் பட்டியல் புகார் கொடுத்த வர்கள், 2018-ல் மட்டும் 18 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.  

கார்ப்பரேட் - வகுப்புவாதக் கூட்டு

பொருளாதார இறையாண்மை புறந்தள்ளப்பட்டு அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் கம்பெனி களின் நலனே மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையாகிவிட்டது. என்றுமில்லாத அளவுக்கு வேலையின்மை, மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு ஆகியவற்றால் 10 ஆண்டு கால மோடி ஆட்சி தேசத்து மக்களுக்கு மிகப்பெரும் துயரமாக மாறிவிட்டது.  மொத்தத்தில் மோடி அரசு ‘கார்ப்பரேட் - வகுப்புவாத கூட்டுக் களவாணி’ அரசாக இயங்கி வருகிறது.

94 தொகுதிகளில்  இடதுசாரிகள் போட்டி

இத்தகைய பின்னணியில் தான் 18ஆவது நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற ஏப்ரல்  19 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி  உள்ளிட்டு 21 மாநிலங்களில் முதல் கட்டமாகவும், ஜூன் -1 அன்று பீகார் உள்ளிட்டு  8 மாநிலங்களில் கடைசி கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் 94 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 53 தொகுதி களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 28 தொகுதிகளி லும் போட்டியிடுகின்றன. தமிழ்நாடு - புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்தியா கூட்டணியின் அங்கமாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

இந்தியா அணியின் ஆட்சி, வரலாற்றின் தேவை

கடந்த 10 ஆண்டு காலமாக மோடி தலைமை யிலான பாஜக அரசு ஜனநாயகம், மதச்சார்பின்மை, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி மற்றும் சமூக நீதி ஆகிய அரசியல் சட்ட விழுமியங்களை தகர்த்து வரும் நிலையில், 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் வழக்கம் போல் நடைபெறக்கூடிய தேர்தல்  அல்ல. மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தையே திருத்தி பாசிச ஆட்சியை நிறுவிவிடு வார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாஜகவின் திட்டம் ஒருகட்சி பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவுவதற்கான சூழ்ச்சியே ஆகும். இந்தியாவைப் பாதுகாக்க, மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க,  அரசியல் சட்டத்தைப்  பாதுகாக்க, பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணி அதிகாரத்திற்கு வருவது வர லாற்றின் தேவையாக உள்ளது என்பதோடு 18-ஆவது நாடாமன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் பலம் அதி கரிக்க வேண்டும் என்பதும் இன்றைய அரசியல் தேவையாக உள்ளது.

இடதுசாரிகளின் சாதனை

2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்த லில் பாஜக அல்லாத, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரித்தன. இடதுசாரிக் கட்சிகளின் முன் முயற்சி மற்றும் அழுத்தம் காரணமாகவே மக்கள் நலனை மையப்படுத்திய பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, இடதுசாரிக் கட்சிகள் கொடுத்த வலு வான அழுத்தத்தினால் தான் கிராமப் புறங்களில் ஏழை மற்றும் விவசாய தொழிலாளர் குடும்பங்களின் துயர் துடைக்க, வாழ்வாதாரம் அளிக்க, மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டம்தான் இன்றும் கிராமப்புற இந்தியாவை மரணிக்காமல் பாதுகாத்து வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தை ஒழிப்ப தற்கு பாஜக அரசு நிதி ஒதுக்கீட்டை வெட்டியதோடு, வேலை நாட்களையும் குறைத்தது. மேலும், தகவல் அறியும் உரிமை சட்டம்,  கல்வி  பெறும் உரிமைச்சட்டம் போன்ற சட்டங்கள் உருவான தற்கும் இடதுசாரிக் கட்சிகளின் பாத்திரம் முக்கிய மானதாக இருந்தது. எதேச்சதிகார - கார்ப்பரேட்மய இந்துத்துவா அரசு  கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன்களை மையப்படுத்தியதோடு, மக்களின் இயல்பான மத நம்பிக்கையை, மத உணர்வாக்கி - மதவெறியூட்டி ஒரு பகுதி மக்களின் சிந்தனையை மடைமாற்றம் செய்துள்ளது. இந்தப் பின்னணியில் பாஜகவை வீழ்த்துவ தோடு அரசியல் சட்ட விழுமியங்களை பாதுகாத்திட முழக்கங்களை எழுப்புவதோடு நின்று விடாமல் மாற்றுக் கொள்கைகளை அரசியல் திட்டங்களாக உருவாக்கிடவும், மாற்றுத் திட்டங்களை மக்கள்  மத்தியில் எடுத்துச் செல்வதற்கும் நாடாளுமன்றத் திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இடதுசாரிக் கட்சிகளுக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது

மாற்றுக் கொள்கைகளை அமலாக்கிட...

இப்பின்னணியில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக் கொள்கைகளை தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. மோடி அரசு தனது  ஆட்சியில் உருவாக்கியுள்ள எதேச்சதிகாரக் கட்டமைப்பை மாற்றிட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம், ஆயுதப்படை  சிறப்பு அதிகாரச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்; மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச்சட்டம் (PMLA ACT) ரத்து செய்யப்பட வேண்டும்; அமலாக்கத்துறையிடம் இருந்து அதன் சட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்;  உயர் நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட  நிறுவனங்களின் சுயேச்சையான செயல்பாடு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்;  ஜனநாயகம், மதச்சார்பின்மை, பொருளாதார இறையாண்மை, கூட்டாட்சி, சமூக நீதி போன்ற முழக்கங்களின் முழு உள்ளடக்கத்தை அரசின் அடிப்படைக் கொள்கையாக, அணுகுமுறையாக மாற்றிட வேண்டும். இவற்றை துரித கதியில் நிறை வேற்றிட இடதுசாரிக் கட்சிகளின் வலுவும், அதன்  மூலம் ஏற்படும் அழுத்தமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

வெற்றி பெறச் செய்வீர்!

இப்பின்னணியில், நடைபெற உள்ள 18-ஆவது  நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்வ தோடு, நாடாளுமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் பலம் அதிகரித்திட இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் களை மகத்தான வெற்றி பெறச் செய்திட வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.   




 

;