games

img

மே.தீ எதிரான தொடரைக் கைப்பற்றி டி20 தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறிய இந்திய அணி 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதன் மூலம் டி20 தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று விளையாடிய டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 - 0 என  இந்தியா வென்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் ஷாய் ஹோப் சொற்ப ரன்களில் தீபக் சாஹர் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் பவல் இணையர் 47 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவல் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த ஓவர்களில் வெங்கடேஷ் ஐயர் கைப்பற்றினார். ரோஸ்டன் சேஸ் 12 ரன்களில் ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் வெளியேறினார். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்ட் உடன் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பூரன் 61 ரன்கள் எடுத்து, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரொமாரியோ ஷெப்பர்ட் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி கடைசியாக விளையாடிய 9 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று சாதனை படைத்துள்ளது. அதோடு அடுத்தடுத்த இரண்டு டி20 தொடர்களிலும் எதிரணியை ‘ஒயிட் வாஷ்’ செய்து வென்றுள்ளது. 

மேலும் ஐசிசி டி20 தரவரிசையில் இங்கிலாந்துடன் இணைந்து இந்தியா முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளது. அதன்படி ஆடவர் டி20 தரவரிசை பட்டியலில் இந்தியா, இங்கிலாந்து 269 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணி 266 புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து அணி 254 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 253 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா நான்காவது இடத்திலும் உள்ளது.

;