headlines

img

திருவள்ளுவரிடம் எடுபடாது

உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்றும் தமிழ் மொழியின் உலகளாவிய நற்பெயரை பெருமையை உயர்த்த எல்லா நடவடிக்கை களும் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பேசியிருக்கிறார். 

ஆர்எஸ்எஸ், பாஜகவின் இந்துத்துவா சித்தாந்தத்துக்கு நேர் எதிரான வள்ளுவரின் தத்துவத்தை அழிக்க உறவாடிக் கெடுப்பது என்று பலவாறாக, நீண்டகாலமாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு சிலை வைக்கப் போவதாகக் கூறி கங்கைக் கரைவரை கொண்டு சென்று சாக்குமூட்டையில் கட்டிப் போட்ட தருண் விஜய்யால் பலனில்லை.  அதனால் மோடி களத்தில் இறங்கி தமிழ்மொழி யின் புகழ்பாடுகிறார்.

வெறும் கையால் முழம் போடுவது போல மோடியும் வாய்வார்த்தைகளால் ஜாலம் செய்து கொண்டிருக்கிறார். பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எவ்வ ளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சமஸ்கிருதத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப் பட்டிருக்கிறது என்பதையும் பார்த்தால் தெரியும் இவரது கரிசனம். தமிழுக்கு ஒதுக்கியது வெறும் ரூ.74.1 கோடி. சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கியதோ ரூ.1487.9 கோடி. இது 22 மடங்கு அதிகம். இது  போதும் இவர்களது தமிழ்ப்பாசத்தை வெளிப்படுத்த!

தங்களுக்குப் பிடிக்காத தத்துவ வாதிகளை, அரசியல் தலைவர்களை ஒழித்துக் கட்டவும் ஓரம் கட்டவும் பழிப்பதைவிட, புகழ்ந்து கொண்டே புதைகுழியில் தள்ள முயற்சிப்பதே இன்றைய இந்துத்துவா - முந்தைய சனாதன தர்மத்தின் நடைமுறை. இவர்களது வைதீக மதத்துக்கு எதிராகத் திகழ்ந்த புத்த, சமண  மதங்களை, அதன் தலைவர்களை அப்படித் தான் வளைத்தார்கள். பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை கற்பிக்கும் மநுவுக்கு எதிராக பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறிய திரு வள்ளுவரை தங்கள் கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அதன் இன்னொரு முயற்சியே இந்த கலாச்சார மையங்கள் அறிவிப்பு.

திருக்குறளின் உயர்ந்த வாழ்வியல் சிந்தனை களை, அரசியல் அறங்களை, பரப்புவதற் காகவா இந்த மையங்களை ஏற்படுத்தப் போவ தாகக் கூறுகிறார்கள்? இல்லை. இவர்களது இந்துத்துவா நடைமுறைகளை, ‘பாரதத்தின் செழுமையான கலாச்சாரத்தை, யோகா, ஆயுர்வேதம், பாரதிய மொழிகள், செவ்விசை போன்றவற்றில் பயிற்சி’ அளிக்கவாம். இதற்கு ஏன் திருவள்ளுவர் பெயர்? வேண்டுமானால் பாபா ராம்தேவ் பெயரிலோ, ஜக்கி வாசுதேவ் பெயரிலோ அமைக்கலாம்! இல்லை புராண கால ரிஷிகள் பெயரில் செய்யலாம்! திரு வள்ளுவர் பெயரை வைத்து தமிழ்நாட்டில் அர சியல் நடத்துவது தானே முக்கியம். மகாபார தத்தில் திருதராஷ்டிரன் எதிரியை இறுக அணைத்தே கொன்றுவிடுவானாம். அத்தகைய திருதராஷ்டிர ஆலிங்கனம், திருவள்ளுவரிடம் எடுபடாது. தமிழர்களும் மோடியின் மகுடிக்கு மயங்கமாட்டார்கள்!

;