tamilnadu

img

இந்தியாவை ஏமாற்றிய பிரான்சின் ‘டஸ்ஸால்ட்’ ஐரோப்பாவின் எம்பிடிஏ நிறுவனங்கள்...? ரபேல் விமான தொழில்நுட்பங்களை ஒப்புக்கொண்டபடி தரவில்லை....

புதுதில்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தப்படி; இந்தியாவுக்கு வழங்க வேண்டிய தொழில்நுட்பங்களை ‘டஸ்ஸால்ட்’ நிறுவனமும், ‘எம்பிடிஏ’ நிறுவனமும் இன்னும் வழங்கவில்லை என்ற தகவல் மத்திய தலைமை கணக்குத்தணிக்கை அலுவலக அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.

அதாவது, ரூ. 59 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில், விமானத் தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பிரான்ஸின் ‘டஸ்ஸால்ட்’ நிறுவனமும், ஐரோப்பிய ஆயுதங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘எம்பிடிஏ’ நிறுவனமும் இன்னும்அவற்றை வழங்கவில்லை என்று மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில் வேறு பல விதிமீறல்கள் நடந்திருப்பதையும் சிஏஜி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, 36 ரபேல் போர் விமானங்களை ரூ. 59 ஆயிரம்கோடி மதிப்பில் வாங்குவதற்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா ஒப்பந்தம் செய்தது.இதன்படி ரபேல் போர் விமானங்களை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த எம்பிடிஏ நிறுவனம் விமானத்துக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது.

இதில் 10 ரபேல் போர் விமானங்களை இதுவரை டஸ்ஸால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அவற்றில் 5 விமானங்களை கடந்த ஜூலை 29 அன்று, இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. இந்தியாவும் உடனடியாக அவற்றை விமானப்படையில் இணைத்தது. இந்நிலையில் டஸ்ஸால்ட் மற்றும் எம்பிடிஏ நிறுவனங்கள் உடனான ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான தணிக்கை அறிக்கையை மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.அதில், ‘’2015 செப்டம்பர் மாதம் டஸ்ஸால்ட் நிறுவனம், எம்பிடிஏ நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 30 சதவிகிதம் உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) வழங்குவோம் எனக் கூறியிருந்தது. ஆனால், இதுவரை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை.உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான காவேரி இயந்திரத்துக்கு பிரான்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம் என்று டிஆர்டிஓ அமைப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், இன்றைய தேதி வரை டஸ்ஸால்ட், எம்பிடிஏ ஆகிய இரு நிறுவனங்களுமே ஒப்பந்தப்படி தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லை.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தில் 30 சதவிகிதத்தை இந்தியாவில் செலவிட வேண்டும். அதாவதுஉதிரிபாகங்களை கொள்முதல் அல்லது புதிய ஆராய்ச்சி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த விதிமுறைகள் அனைத்தும் ரூ. 300 கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து இறக்குமதிக்கும் பொருந்தும். ஆனால், பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் இந்தியாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை. தங்களின் உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை.பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளிநாடுகளுக்கான கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு விளைவுகளைக் கொடுக்கவில்லை. ஆதலால், தங்களின் கொள்கைகளை மறு ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தி, தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. இவ்வாறு சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;